சென்னை: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் பணியில் திமுக மும்முரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து மாநாடு, பொதுக்கூட்டம் நடக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. திமுக அனைத்து அணிகளையும் களத்தில் இறக்கிவிட்டு, மக்களுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வதே இலக்கு என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு களப்பணிகளில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் ஒரு பக்கம் பிரமாண்ட மாநாடுகளை நடத்துவது, இன்னொரு பக்கம் வீடுவீடாகச் சென்று இதுவரை செய்திருக்கிற, செய்யப்போகிற திட்டங்களை விளக்குவது என்று பம்பரமாகச் சுற்றி வருகின்றனர் திமுக நிர்வாகிகள். களத்தில் இந்த ‘கனெக்ஷன்’ வேறு எந்த கட்சிக்கும் இல்லை. தேர்தலை எதிர்நோக்கி பல்வேறு களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலையில் வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பை நடத்தியது. அடுத்ததாக விருதுநகரில் தெற்கு மண்டலத்துக்கான சந்திப்பை நடத்த இருக்கிறது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 3.2 கோடி பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களை நேரடியாக அணுகி கட்சியின் நலத்திட்டங்களை விளக்கவும், தேர்தல் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதிப்படுத்தவும் மண்டல வாரியாக மகளிர் அணி மாநாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்கு போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக திமுக செய்துவரும் பணிகளை மாநாட்டின் மூலம் கொண்டு சேர்ப்பதோடு அல்லாமல், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் மகளிரணி உறுப்பினர்களைக் கொண்டு வீடுவீடாகச் சென்று பரப்புரை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் மேற்கு மண்டல திமுக நிர்வாக மாவட்டங்களில் இருந்து சுமார் 1.5 லட்சம் பெண்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து திமுக டெல்டா மண்டலத்தில் தனது இரண்டாவது ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மகளிர் அணி மாநாட்டை நடத்துகிறது. வரும் 26ம் தேதி தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இந்த மாநாடு நடக்கிறது. மாநாட்டில் முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மாநாடு நடக்கிறது. டெல்டா மண்டலத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன், நன்னிலம் தொகுதியில் ஆர்.காமராஜ், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் ஆகியோரை தவிர அதிமுக கூட்டணியில் வேறு யாரும் வெற்றிபெறவில்லை. வைத்திலிங்கமும் இப்போது திமுகவில் இணைந்துவிட்டார். டெல்டாவை பொறுத்தவரை திமுக கூட்டணி மிக வலுவாக இருக்கிறது. இந்த டெல்டா மண்டல மகளிரணி மாநாடு டெல்டாவை முழுமையாக திமுகவே கைப்பற்ற உதவும் என்பது திமுக நிர்வாகிகளின் நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வார்டு, தெரு அளவில் வாக்காளர்களை அணுகும் பணிகளும் திமுக தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
