சென்னை: சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அனைத்து கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு அதிமுக எம்எல்ஏவும் ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர் திருப்பி அனுப்பிய கூட்டுறவு சங்கங்களின் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும், பதிவாளருக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கவும் வழிவகை செய்யும் சட்ட மசோதா கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி 2025ம் ஆண்டு ஜூன் திருப்பி அனுப்பினார் இந்த சட்ட முன்முடிவு பேரவையில் மறு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை, ஆளுநருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும், பஸ்ட் கிளாஸ் மாநிலத்தில் வொர்ஸ்ட் கிளாஸ் ஆளுநராக ஆர்.என்.ரவி உள்ளார் என்று தெரிவித்தார்.
ஜிகேமணி(பாமக ): சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்புவது ஏற்புடையது அல்ல. ஆளுநர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட வேண்டும்.
எஸ்.எஸ்.பாலாஜி (விசிக): சட்டங்களை திருப்பி அனுப்பும் போது ஆளுநர் கூறும் காரணங்கள் மக்களை அவமதிப்பது போல் உள்ளது. ஆளுநரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
நாகை மாலி(சிபிஎம் ): மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தான் இந்த பேரவையில் பேச வேண்டும். ஆளுநரின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
சதன் திருமலைக்குமார்(மதிமுக ): ஆளுநர் உரையை படிக்காமல் செய்வது அநாகரிகமான செயல். அவர் வேண்டும் என்றே சட்ட முன்வடிவுகளை திருப்பி அனுப்பு கண்டிக்க தக்கது.
ஜவாஹிருல்லா(மமக): உச்சநீதிமன்றத்தில் பல முறை குட்டு பெற்ற இந்த ஆளுநர். இதை திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநர் ஒலி வாங்கி அனைத்து வைக்கப்படவில்லை. உண்மைக்கு புறம்பான கருத்துகளை அவர் தெரிவித்தார்.
சபாநாயகர் அப்பாவு: யாரும் மைக்கை ஆப் செய்யவில்லை. பேரவைத் தலைவர் பேசத் தொடங்கியதும் மற்ற மைக்குகள் ஆப் ஆகி விடும். யாரும் ஆளுநர் மைக்கை ஆப் செய்யவில்லை. அவர் ஆளுநர் உரையை வாசித்து இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆளுநர் உரையை வாசிக்காமல் பேச முயன்ற காரணத்தால் பேரவைத் தலைவராக பேசினேன். அப்போது அனைத்து மைக்குகளும் ஆப் ஆகிவிடும்.
ஈஸ்வரன்(கொமதேக): நாம் எவ்வளவு கண்ணியமாக. நாகரிகமாக நடந்து கொண்டாலும் ஆளுநர் மாறுவதாக இல்லை. ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டிக்கிறேன்.
ஐயப்பன்(அதிமுக ஓபிஎஸ் அணி): ஆளும் கட்சி தயார் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநர் வாசிப்பது தான் மரபு. ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றது கண்டனத்திற்குரியது. எனவே ஆளுநரை திரும்ப பெற வேண்டும். வானதி சீனிவாசன் அவையில் இருக்கும் போது ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் பேசியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
