செங்கல்பட்டு: பெரும்பான்மையான இடங்களில் வென்று அதிமுக ஆட்சியமைக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில், ஓட்டல் ஹைவே இன் எதிரே உள்ள 23 ஏக்கர் பரப்பளவிலான பிரமாண்ட திடலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி; மதுராந்தகமே குலுங்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளம் மதுராந்தகம் பொதுக்கூட்டம். இந்தியாவே மதுராந்தகத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது.
உரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுத்து செயல்பட்டால் வெற்றி என்பது நிச்சயம். வெற்றி என்பது நிச்சயம்; அத்தகைய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையான இடங்களில் வென்று அதிமுக ஆட்சியமைக்கும். 210 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசுடன் நெருக்கமாக இருந்தோம். கேட்ட திட்டத்தைக் கொடுத்தார்கள்; கேட்ட நிதியைக் கொடுத்தார்கள். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று கூறினார்.
