டெல்லி நீதிமன்றத்தில் பரபரப்பான விசாரணை; அதிமுக கொடி, சின்னம் யாருக்கு சொந்தம்?.. விரிவான ஆய்வு நடத்தி வருவதாக ஆணையம் பதில்

 

புதுடெல்லி: அதிமுக மற்றும் அதன் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரிவான ஆய்வு நடத்தி வருவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் குறித்த உரிமையியல் வழக்கு ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு காலியாக இருந்த ஆறு இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. முன்னதாக, அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தத் தவறியதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தின் மீது புகழேந்தி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘அதிமுக கட்சி, அதன் கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரிவான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்கோரிக்கைகள் அனைத்தும் தற்போது தீவிர பரிசீலனையில் உள்ளன; மேலும், இந்த விவகாரத்தில் அனைத்து சட்ட நடைமுறைகளையும் முழுமையாகவும், கூட்டாகவும் ஆராய்ந்து வருவதால் விரைவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில், நீதிபதி விடுமுறை காரணமாக விசாரணை வரும் பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ‘விரைவில் முடிவு அறிவிக்கப்படும்’ என்ற தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: