மதுராந்தகம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை விவாதத்தின்போது, உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் (திமுக) பேசுகையில், ”ஆளுநர் உரை என்பது ஒரு அர்த்தமற்ற நடைமுறை என்று நம்முடைய முதலமைச்சர் ஆளுநரே தேவையில்லை என அரசியல் அமைப்பு திருத்தம் கோருவோம். அரசு தயாரித்து அளித்த அறிக்கையை ஆளுநர் படிக்காமல் வெளியேறுவதால் திராவிட மாடல் அரசின் சாதனைகளை மறைக்க முடியாது. திராவிட மாடல் அரசு பெருமளவு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது, அதை யாரும் மறுக்க முடியாது.
2011ல் அதிமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே செய்யவில்லை என்பதுதான் இந்த நேரத்தில் நான் வைக்கும் குற்றச்சாட்டு. 2003ல் நீங்கள் வேக வேகமாக அமல்படுத்திய விளைவுதான் இன்றைக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பல ஆண்டு பிரச்னையை திராவிட மாடல் அரசு கருணையோடு அணுகி தீர்வை ஏற்படுத்தியிருக்கிறது, இது நிச்சயமாக பலனை அளிக்கின்ற திட்டம். உங்கள் தொகுதியில் உங்கள் முதலமைச்சர் என்ற அட்சய பாத்திரத்தை 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கி இருக்கிறார்கள். இதனால் தீர்க்கப்படாமல் இருக்கின்ற பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டு இருக்கிறது.
உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சாலவாக்கம் ஒன்றியம் உருவாக்கவேண்டும் என 40 ஆண்டு காலமாக பிரச்னை இருந்தது. நானே கோரிக்கை வைத்திருந்தேன். இப்போது சாலவாக்கம் ஒன்றியத்தை பிரித்து கொடுத்த முதலமைச்சருக்கும், துறைஅமைச்சருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஐந்தாண்டு காலம் பசுமை நிறைந்த நினைவுகளோடு இங்கு பழகி இருக்கிறோம். நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். 2026ல் மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என உணர்ச்சி பொங்க பேசினார்.
