செங்கல்பட்டு: பாஜக – தே.ஜ. கூட்டணி ஆட்சியை தமிழ்நாடு விரும்புகிறது என பிரதமர் மோடி பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில், ஓட்டல் ஹைவே இன் எதிரே உள்ள 23 ஏக்கர் பரப்பளவிலான பிரமாண்ட திடலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி; தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் எனக் கூறி உரையை தொடங்கினார். 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
சில நாட்களுக்கு முன் பாரத ரத்னா எம்ஜிஆரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினோம். தேச பக்தியும் வீரமும் தமிழர்களின் ரத்தத்தில் கலந்துள்ளது. ஒற்றைக் காரணத்துக்காக அனைத்துத் தலைவர்களும் இங்கு கூடியுள்ளோம். ஊழலற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக அனைத்துத் தலைவர்களும் கூடியுள்ளோம். தமிழ்நாட்டில் ஊழலற்ற அரசை உருவாக்க மதுராந்தகத்தில் கூட்டணி தலைவர்கள் கூடியுள்ளனர்கோயில்கள், அறிவியல், தொழில்நுட்பம் மூலம் இந்தியாவுக்கு தமிழ்நாடு பெருமை சேர்த்துள்ளது.
தமிழ்நாடு எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அவ்வளவு வேகமாக இந்தியாவும் வளரும். யு.பி.ஏ. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டது. என்.டி.ஏ. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு வரிப் பகிர்வாக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மக்களின் நலனுக்காக ஒன்றிய அரசு ரூ.11 லட்சம் கோடி அளித்திருக்கிறது. யு.பி.ஏ. ஆட்சியை விட என்.டி.ஏ. ஆட்சியில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் போன்ற விரைவாக செல்லும் ரயில்கள் என்.டி.ஏ. ஆட்சியில்தான் இயக்கப்பட்டுள்ளன.
என்.டி.ஏ. ஆட்சி வழங்கக் கூடிய உதவியால் தமிழ்நாட்டின் விவசாயிகள், உற்பத்தியில் சாதனை புரிந்துள்ளார்கள். விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் மூலம் தமிழ்நாடு விவசாயிகளுக்கு ரூ.12,000 கோடி வழங்கப்பட்டது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு படகுகள் வழங்கப்பட்டுள்ளன. வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க இளைஞர்களின் சக்தி மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலத்துக்கு வரும் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். மக்களின் நலனும், ஆரோக்கியமும்தான் என்.டி.ஏ. கூட்டணிக்கு முக்கியம். முத்ரா திட்டத்தில் ஏழை மக்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் பெரிய அளவில் முதலீடுகள் குவியும். குற்றங்களை தடுப்பதில் ஜெயலலிதாவின் ஆட்சி சிறப்பாக செயல்பட்டது. என்.டி.ஏ. ஆட்சியை மக்கள் அமைத்துத் தந்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். யு.பி.ஏ. அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது; என்.டி.ஏ. அரசு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியது. ஜல்லிக்கட்டு நடத்த வழி வகை செய்தது என்.டி.ஏ. அரசுதான். ஒன்றிய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு மாநில வளர்ச்சிக்கு வித்திடும் அரசு தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று கூறினார்.
அதிமுகவினர் அதிர்ச்சி
பாஜக – தே.ஜ. கூட்டணி ஆட்சியை தமிழ்நாடு விரும்புகிறது. அதிமுக என குறிப்பிடாமல் பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பிரதமர் மோடி பேசினார். தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பேசிய நிலையில் பாஜக – என்.டி.ஏ. ஆட்சி என மோடி பேசினார். அதிமுக பெயரையே குறிப்பிடாமல் பாஜக-என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி என மோடி பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
