உட்கட்சி பூசல் எதிரொலி; விழுப்புரம் பாஜ தலைவர் கார் கண்ணாடி உடைப்பு: மாநில நிர்வாகி மீது போலீசில் புகார்

 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவராக உள்ளார். இவருக்கும் மாநிலத் துணைத்தலைவர் முகையூர் பகுதி சம்பத் என்பவருக்கும் கட்சி சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி மதுராந்தகத்திற்கு இன்று வருகை தர உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகளை அழைத்து செலவு தொகையை மேலிடத்திலிருந்து மாவட்ட தலைவர் தர்மராஜ் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் கட்சிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் உள்ள மாவட்ட தலைவர் தர்மராஜ் வீட்டின் முன்பு இருந்த தர்மராஜுக்கு சொந்தமான இரண்டு கார் கண்ணாடிகளை சிலர் உடைத்துள்ளனர்.

சத்தம் கேட்டு தர்மராஜ் வீட்டில் இருந்து வெளியே வந்து உள்ளார். அப்போது மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாக அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் இன்று புகார் அளித்தார். இந்த புகாரில், உட்கட்சி விவகாரத்தில் ஆட்களை அனுப்பி வைத்து என்னுடைய இரண்டு கார்களை உடைத்து சேதப்படுத்தி எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் எனது உயிருக்கு பேராபத்து ஏற்படலாம் என அதில் கூறி உள்ளார். மேலும் புகாரில், மாநில துணை தலைவர் ஏ.ஜி. சம்பத் மற்றும் சிலரை குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: