மேட்டுப்பாளையம், ஜன.23: மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொது மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டூவீலர் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்டிச்சென்று பொது மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியை கோவை சாலையில் அபிராமி தியேட்டர் அருகில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலர் சத்திய குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியானது கோவை பிரதான சாலை, ஊட்டி சாலை, ஆத்துப்பாலம் வழியாக சென்று ஓடந்துறையில் நிறைவுற்றது. பேரணியின் போது மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும்.
சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஊழியர்கள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
