கோவை, ஜன. 23: தமிழக அரசு சிறுதுளி அமைப்பின் நீர்மேலாண்மை பணிக்கு விருது வழங்கியுள்ளது.
இது குறித்து சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் நிருபர்களிடம் கூறியதாவது: சிறுதுளி மூலம் நொய்யல் ஆற்றுப் படுகையில் நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் மேம்பாட்டு பணி தொடர்ந்து மேற்கொள்ளபட்டு வருகிறது.
தமிழக அரசு சிறுதுளி அமைப்பின் நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீட்பு முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 19-ம் தேதி மாநில விருது வழங்கி உள்ளது. இது சிறுதுளி அமைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். நீர்நிலைகளை பாதுகாக்க தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. 23 ஆண்டுகளில் கோவையில் மட்டும் 10 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘வைல்டு தமிழ்நாடு’ என்ற ஆவணப்படத்தின் சிறப்பு காட்சி வரும் 26ம் தேதி பிஎஸ்ஜி (ஐஎம்எஸ்ஆர்) அரங்கில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஒளிபரப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, அறங்காவலர் சதீஷ், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், கஜனி பாலு, தலைமை செயல்பாட்டு அதிகாரி சின்னசாமி உடனிருந்தனர்.
