9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம்

நாகப்பட்டினம், ஜன. 23: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் தனஞ்செயன், தமிழ்நாடு கிராம வருவாய் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்டப் பொருளாளர் சுதன்குமார் ஆகியோர் பேசினர். வருவாய்த் துறையில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். ஏற்கனவே இருந்ததைப் போல 25 சதவீதம் கருணை அடிப்படை பணி நியமன உச்ச வரம்பை அமல்படுத்த வேண்டும்.

பணியின் போது மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். ஒப்பந்த தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Related Stories: