சத்தி,ஜன.23: சத்தியமங்கலம் வனப்பகுதியில் சாலையோரமாக நடமாடிய கழுதைப்புலியை கண்டு வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அரிய வகை வனவிலங்கான கழுதைப்புலிகள் அதிகளவில் வசித்து வருகின்றன. குறிப்பாக பவானிசாகர் வனப்பகுதி, பண்ணாரி வனப்பகுதி மற்றும் தெங்குமரஹாடா வனப்பகுதிகளில் கழுதைப்புலிகள் நடமாட்டம் உள்ளது.
இந்நிலையில் இரவு நேரத்தில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே சாலையோர வனப்பகுதியில் ஒரு கழுதைப்புலி உலா வந்தது. கழுதைப்புலி நடமாட்டத்தை கண்டு அவ்வழியாக காரில் சென்ற பயணிகள் பீதியடைந்தனர். சிலர் வீடியோ எடுத்தனர். அப்போது காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் கழுதைப்புலி அங்கும் இங்கும் நகர்ந்து சென்றது. சிறிது நேரத்தில் அங்கிருந்த கழுதைப்புலி, அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
