சென்னை: பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு மாலையே டெல்லி திரும்புகிறார். அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தையை பாஜவே நடத்தி வருகிறது. இது அதிமுக தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டச் செலவு முழுவதையும் அதிமுக ஏற்றுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தற்போது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஜூரம் பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 4 முனைப் போட்டி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை ஏற்கனவே இருந்த கட்சிகளும், மேலும் சில கட்சிகளும் சேர்ந்து போட்டியிடும் சூழ்நிலை உள்ளது. அதிமுக கூட்டணிதான் பல கூறுகளாக உடைந்துள்ளது. அதை ஒட்ட வைக்கும் முயற்சியில் பாஜவின் தமிழக பொறுப்பாளர் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் இறங்கியுள்ளார்.
சென்னையில் கடந்த இரு நாட்களாக முகாமிட்டு, அமமுக தலைவர் டிடிவி.தினகரனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணிக்கு அழைத்து வந்தார். அதை தொடர்ந்து பாமக (அ) பிரிவு தலைவர் அன்புமணி, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், தமமுக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோரை தனித்தனியாக அழைத்து அவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது அதிமுக தலைவர்கள் யாரும் இடம்பெறவில்லை. தற்போது தமிழக கூட்டணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிதான் தலைவர் என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்தாலும், கூட்டணி பேச்சுவார்த்தை முழுவதையும் பாஜவே செய்து வருகிறது. இது அதிமுக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் செய்து வருகிறார். ஆனால் அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி இல்லாமலேயே கூட்டணி பேச்சு நடக்கிறது.
இது படையப்பா படத்தில் நடிகர் செந்தில்தான் மாப்பிள்ளை. ஆனால் அவர் அணிந்துள்ள டிரஸ் என்னுடையது என ரஜினி குறிப்பிடுவார். அதுபோல முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான். ஆனால் கூட்டணியை நாங்கள் முடிவு செய்கிறோம் என்று பாஜ அந்த வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளது. தற்போது அந்த கூட்டணிக்கு தேமுதிகவும், ராமதாஸ் தலைமையிலான பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் மட்டும் பிடிகொடுக்காமல் உள்ளன. இவர்கள் இன்று மதுராந்தகத்தில் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நேற்று பியூஸ்கோயலை சந்தித்த அனைவரும் இன்றைய பொதுக்கூட்ட மேடையில் அமருகின்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் பிற்பகல் 2.15 மணிக்கு வருகிறார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து ெஹலிகாப்டரில் மதுராந்தகம் செல்கிறார். அங்கு பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, ஹெலிகாப்டரில் விமானநிலையம் வருகிறார். பின்னர் 5 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடி கலந்துகொள்ளும் மேடை மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக போடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதுகெலும்பாக இருப்பது இந்த தேசிய நெடுஞ்சாலை மட்டுமே.
இதனால் திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக சென்னைக்கு வரவும், சென்னையில் இருந்து திருச்சி வழியாக செல்லும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திண்டிவனம் வந்து, பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இன்று அந்த சாலைகளில் நெரிசல் அதிகமாக ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு மேடைகள், வெயில் அடிக்காமல் இருப்பதற்காக கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் வரும் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மற்றும் விழுப்புரம், சேலம் வரை உள்ள மக்களை சிறப்பு பஸ்களில் அழைத்து வருவது, மேடை அமைத்தது உள்பட அனைத்து செலவுகளையும் அதிமுகவே ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் விழா நடைபெறும் இடத்தை முன்னாள் அமைச்சர் வேலுமணி அடிக்கடி ஆய்வு செய்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற செலவுகளை அதிமுக தலையில் கட்டினாலும் கூட்டணி முடிவை பாஜதான் எடுத்து வருகிறது. நாளை அதிமுகவுக்கு சீட் ஒதுக்கும் வேலையையும் பாஜவே செய்யும் நிலைதான் தற்போது உள்ளதாக கூறப்படுவதால், கடைசி நேரத்தில் பாஜ மற்ற மாநிலங்களைப்போல தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று அதிமுக தலைவர்கள் தற்போது அச்சப்படத் தொடங்கியுள்ளனர். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
