காசு… துட்டு… பணம்… மணி… மணி… சீட்டுக்கு ரூ.100 கோடி எடப்பாடிக்கு ஆசை காட்டிய மாஜி இன்ஸ்.: ரூ.30 கோடியுடன் கோதாவில் குதித்த அன்புமணி கோஷ்டி

சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று, அதன்பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணலையும் நடத்தி முடித்துவிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 386 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதில் சேலம் மேற்கு தொகுதியில் 33 பேர் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளனர். இதில் தற்போதைய மாவட்ட செயலாளர் பாலுவுக்கும், 2 முறை தொடர்ச்சியாக எம்எல்ஏவாக இருந்த வெங்கடாசலத்திற்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. என்றாலும் பாலுவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், எடப்பாடியின் தீவிர விசுவாசியான வெங்கடாசலத்திற்கு உள்ளாட்சி தேர்தலில் முக்கிய பதவி வழங்கப்படும் என அவரை சமாதானம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் லட்சுமணன் என்பவரும் களத்தில் குதித்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பல வருடங்களாக வேலைக்கு செல்லாமல் விடுப்பிலேயே இருந்து வந்த நிலையில், பணியில் இருந்து ஓய்வு பெற்றதுடன், ரியல் எஸ்டேட் தொழிலில் குதித்தார். இவர் ஓசூர் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவு நிலத்தை வாங்கி வைத்துள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் எடப்பாடி பழனிசாமியை பார்த்து காலில் விழுந்து ஆசி பெற்றுச்செல்வார். தற்போது அவர் சேலம் மேற்கு, சங்ககிரி, திருச்செங்கோடு, சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்ததுடன் நேர்காணலுக்கும் சென்றுவந்துவிட்டார். இவர் 188 தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளதுடன், ரூ.100 கோடி செலவு செய்வேன் என தலைமையிடம் வாக்குறுதி கொடுத்துள்ளதாக கட்சியினர் கூறி வருகின்றனர். இப்படி ஒரு பார்ட்டியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் எடப்பாடியின் மனதில் இது மாற்றத்தை ஏற்படுத்தும் என கட்சியினர் கூறி வருகின்றனர்.

இத்தொகுதியின் எல்எல்ஏவாக பாமக அருள் இருக்கிறார். இவர், பாமக ராமதாஸ் அணியில் இருக்கிறார். அதிமுக கூட்டணியில் அன்புமணி இருப்பதால், அவரது அணிக்கு ஒதுக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இதில் மாவட்ட செயலாளராக இருக்கும் சரவணன் என்பவருக்கு ஒதுக்கப்படும் எனவும் அவர் ரூ.30 கோடி வரை செலவு செய்வார் எனவும் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் பெரும் தொகையுடன் சீட்டு கேட்பதால் ரூ.100 கோடி பக்கம் எடப்பாடி சாய்வாரா அல்லது ரூ.30 கோடி பக்கம் சாய்வாரா என கேள்வி எழுந்து உள்ளது. இதனால் இத்தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் பணத்தை வாரி இறைக்கும் வேட்பாளர்களைதான் எடப்பாடி தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், மாஜி இன்ஸ்பெக்டருக்கு இந்த தொகுதியில் சீட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories: