சென்னை: தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ உள்ளது. ஆனால், பாஜதான் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேசி வருகிறது. இந்நிலையில், யாருக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு கட்சியினரும் குத்து மதிப்பாக தங்கள் வேலைகளை தொடங்கிவிட்டனர். அதில், தென்காசி பாஜ மாவட்ட செயலாளராக இருப்பவர் ஆனந்தன் அய்யாச்சாமி. மென்பொருள் இன்ஜினியரான இவர், அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு மென்பொருள் கம்பெனியும் நடத்தி வருகிறார். தற்போது அந்த கம்பெனியை அவரது மனைவி கவனித்து வருகிறார்.
இவர், ஜோகோ என்ற மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீதர் வேம்புவுக்கு நெருக்கமானவர். அவரது வளர்ப்பு மகன் போன்றவர். இதனால் இருவரும் இணைந்து தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மகளிர் சுய உதவிக்குழுக்கள், மகளிர் சிறு தொழில் மையங்கள், கிராமங்களில் அடிப்படை வசதிகள் போன்றவற்றை செய்து வருகின்றனர். அதுதவிர படித்தவர்களுக்கான ஏராளமான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, கடந்த மக்களவை தேர்தலில் தென்காசியில் போட்டியிட பாஜவில் சீட் கேட்டார். அவருக்காக ஸ்ரீதர் வேம்புவும் மேலிடத்தில் பரிந்துரை செய்தார்.
ஆனால் இவர், மாநில தலைவர் பதவிக்கான ரேசில் இருந்ததால், இவர் போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி வாய்ப்பை பெறுவார் என்று நினைத்த அண்ணாமலை, ஜான் பாண்டியனுடன் பேசி, நீங்கள் கண்டிப்பாக தென்காசியில் போட்டியிடுங்கள். ஆனந்தன் அய்யாச்சாமி வேலை செய்து வைத்துள்ளார். அதனால் நீங்கள் எளிதாக வெற்றி பெறலாம் என்று மூளை சலவை செய்தார். அவரும் போட்டியிட்டார். ஆனால் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டார்.
இந்நிலையில், தற்போது தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூரில் போட்டியிட விரும்பி, அதற்கான வேலைகளை கடந்த சில நாட்களாக செய்து வந்தார்.
இதனை அறிந்த நயினார் நாகேந்திரன் ஆனந்தன் அய்யாச்சாமி போட்டியிடுவதை தடுக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனந்தன் தொகுதியில் பல இடங்களில் அவர் நல பணிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறார். சமீபத்தில் முன்னாள் தலைவர் அண்ணாமலையை அழைத்து பெரும் கூட்டத்துடன் பொங்கல் விழாவை வாசுதேவநல்லூரில் நடத்தினார். இதனால் அவர் நின்றால் வெற்றி பெற்று விடுவார். அப்போதும் மாநில தலைவர் ரேசில் வருவார் என்று தற்போதைய தலைவரும் கருதுகிறார்.
மேலும், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் கடைய நல்லூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா. இவர், நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர். இதனால், குட்டியப்பாவின் அண்ணன் அய்யப்பராஜ் என்பவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய நீதிபதி தேர்வுக்குழுவில் உள்ள மூன்று நீதிபதிகள் குழுவில் தனது உறவினர் நீதிபதி மூலம் தேர்வு பட்டியலில் இடம்பெற்றாலும், ஆனால் நீதிபதி நியமனத்தை பொறுத்தவரை இறுதி முடிவு ஒன்றிய அரசு கையில் இருப்பதால் நயினார் தீவிரமாக முயன்று வருகிறார். இதனால் குட்டியப்பாவும், நயினார் சொல்லும் பேச்சை கேட்கும் நிலையில் உள்ளார்.
இதனால், அதிமுக கூட்டணியில் நீடிக்கும் ஜான் பாண்டியன் கட்சிக்கு வாசுதேவநல்லூர் தொகுதியை ஒதுக்க நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக கிருஷ்ணமுரளி ஆகியோர் சேர்ந்து முடிவு செய்து, ஜான் பாண்டியனிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டனர். அவரும் வாசுதேவநல்லூரில் வேலையை தொடங்கிவிட்டார். தொகுதியில் வீடு பார்த்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதாக தெரிய வருகிறது. இவ்வாறு பாஜவுக்குள் நடக்கும் உள்குத்துகளால் தென் மாவட்ட பாஜவில் பரபரப்பு நிலவுகிறது.
