வெயில் எனக்குதான் 3 எழுத்துக்காரர் குறி: இலைக்கு கல்தா

வேலூர்: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வெயில் மாவட்டமான வேலூர் சட்டமன்ற தொகுதிைய பொருத்தவரை திமுக, அதிமுக இடையில் தான் போட்டி என்ற நிலைமை இருந்து வந்தது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற போது திமுக சார்பில் கார்த்திகேயன், அதிமுக சார்பில் எஸ்.ஆர்.கே.அப்பு உட்பட 17 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் 84,299 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்டவர் 75,118 வாக்குகள் பெற்று, 10,181 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிந்து, 3 ஆண்டுகள் கழித்து, கடந்த 2024ம் ஆண்டு எம்பி தேர்தல் நடந்தது. இதில், திமுக, அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி என தமிழகத்தில் மும்முனை போட்டியாக இருந்தது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும், பிரதான எதிர்க் கட்சியாக உள்ள அதிமுக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வாங்கிய வாக்குகளை விட, அதிமுக வேட்பாளர் 6 சட்டமன்ற தொகுதியிலும் சொற்ப வாக்குகளை பெற்றார். இதற்கு அதிமுக நிர்வாகிகள் பலரும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களிடம் விலை போனதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வேலூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 75,118 வாக்குகள் பெற்று தோல்வியடைந்த நிலையில், 6 சட்டமன்ற தொகுதிகளை சேர்த்து எம்பி தேர்தலில் அதிமுக வேட்பாளர் மொத்தமாக 11,926 வாக்குகளை மட்டுமே பெற்றார். அந்த வகையில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 63 ஆயிரம் வாக்குகளை அதிமுக இழந்துவிட்டது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் செயல்பாடு பெரிய அளவில் பொதுமக்கள் அறியும் வகையில் இல்லாதது கட்சியினருக்கும் சற்றே ஏமாற்றம் அளிக்கிறது.

மேலும், வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இழந்த 63 ஆயிரம் வாக்குகளை எப்படி திரும்ப பெறுவது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். இந்த நிலையில் தான் கடந்த எம்பி தேர்தலில் போட்டியிட்ட 3 எழுத்துக்காரரான ஏசிஎஸ், தொடர் படையெடுப்பாக, இந்த முறை வேலூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் வேலூரில் அதிமுக சீட்டு சொந்தகட்சிக்கா? அல்லது கூட்டணிக்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு சீட்டு ஒதுக்கீட்டு விஷயத்தில் எடப்பாடி ஆதரவு சொந்தகட்சிக்கு இருக்குமா? கூட்டணிக்கு இருக்குமா? என்று ரத்தங்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Related Stories: