புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்காக ரூ.1,831 கோடி என்பதுதான் சரியான கணக்கு: அதிமுகவுக்கு அமைச்சர் பதில்

சென்னை: பசட்டப்பேரவையில் நேற்று அதிமுக உறுப்பினர் தங்கமணி பேசியதற்கு உயர்கல்வித துறை அமைச்சர் கோவி.செழியன் பதில் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கை:உறுப்பினர் தங்கமணி பேசும்போது, ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்ட, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் பயனாளிகள் பற்றிய விவரம் தவறாக தெரிவதாகவும், 12 லட்சம் பயனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தலா ஆண்டுக்கு 12 ஆயிரம் செலவழித்தால், ரூ.720 கோடி மட்டுமே தேவைப்படும் என்றும், ஆளுநர் உரையில் அது ரூ.1,831 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது சரியா என்றும் ஒரு கேள்வியை எழுப்பினார்.

இந்த இரண்டு திட்டங்களின் கீழ் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு மாதந்தோறும், அவர்கள் படிக்கும் கல்லூரி காலம் முழுவதற்கும் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. அதாவது, ஒருவர் கல்லூரியில் சேரும்போது அளிக்கப்படும் இந்த தொகை மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை மாதந்தோறும் அளிக்கப்படுகிறது. ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள 12 லட்சம் பயனாளிகள் என்பது, இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை. இந்த திட்டங்களின் முதல் மாதத்தில் இருந்து பயனாளிகள், தாங்கள் கல்லூரியில் படிக்கக்கூடிய மூன்று முதல் ஐந்து ஆண்டு காலத்திற்கு, மாதந்தோறும் இந்த தொகையை பெற்று பயனடைந்திருக்கிறார்கள்.

எனவே, 12 லட்சம் பயனாளிகளுக்கு தலா ஓராண்டு என்ற அடிப்படையில் கணக்கிட்டு, ரூ.720 கோடி என்று தங்கமணி தெரிவித்த கணக்கீடு சரியானதல்ல. 2022-23ம் ஆண்டு புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, அதன்கீழ் பயனடைந்த 6.95 லட்சம் பயனாளி மாணவிகளும், 2024-25ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ள 5.4 லட்சம் மாணவர்களும், தாங்கள் படிக்கக்கூடிய கல்லூரி பருவம் முழுமைக்கும் மாதந்தோறும் இதுவரை பெற்றுள்ள தொகை ரூ.1,831 கோடி என்பது சரியான கணக்கே ஆகும்.

Related Stories: