திருச்சி: தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. காங்கிரஸ், மதிமுக, முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. ஆனால் அதிமுக- பாஜ கூட்டணியில் இந்த இரு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் இழுபறியாகவே உள்ளது. பாஜ மேலிடம் அழைத்ததன் பேரில் டெல்லிக்கு சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த பேசினார். ஆனால் அதிலும் முன்னேற்றம் இல்லை.
இந்நிலையில் நேற்று திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி ெபாதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மோடி கூட்டம் முடிந்து மீண்டும் 2வது முறை பேச்சுவார்த்தை நடந்தது. 2 முறை 2மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, அதிமுக வலுவாக உள்ள சில தொகுதிகளை பாஜ கேட்கிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, சிங்காநல்லூர், நீலகிரி, மேட்டுப்பாளையம் மற்றும் தென் மாவட்டத்தில் நாங்குநேரி உள்ளிட்ட சில தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்று பாஜ அடம் பிடிக்கிறதாம். ஆனால் இந்த தொகுதிகளை விட்டுத்தர எடப்பாடி சம்மதிக்கவில்லை.
அதேபோல் 25 சீட் மட்டுமே தர முடியும் என்று அதிமுக கூறுகிறது. பாஜ கட்டாயம் 41 சீட்டுகள் வேண்டும் என்கிறது. இந்த பிரச்னைகள் தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூக முடிவை எட்டாததற்கு காரணம். எங்களுக்கு மட்டும் நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்து விடுங்கள். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு நீங்கள் கொடுக்கும் தொகுதிகளை அவர்கள் வாங்கி கொள்ளட்டும் என்று பியூஷ் கோயல் கூறினார். அதற்கு நாங்கள் கொடுக்கும் தொகுதிகளை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறி விட்டார்.
நேற்று மாலை 4.40 மணிக்கு திருச்சி ஏர்போர்ட்டுக்கு பிரதமர் மோடி வந்தார். அப்போது அவரை வரவேற்க எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. அதேபோல் பொதுக்கூட்டம் முடிந்து சென்ற போது பிரதமரை வழியனுப்பவும் செல்லவில்லை. தொகுதி பங்கீட்டில் பாஜகவினர் காட்டும் கறார், எடப்பாடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தான், மோடியை வரவேற்க செல்லவில்லை என கூறப்படுகிறது. அதிமுக- பாஜ இடையே பேச்சுவார்த்தை முடிந்தால் தான், மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற சூழல் உள்ளது. இதனால் அன்புமணி, தினகரன், ஜி.கே.வாசனும் அதிருப்தியில் உள்ளனர். எனவே மீண்டும் அமித்ஷா எடப்பாடியை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருக்கிறது என்றனர்.
