வெஸ்ட் பாம் பீச்: கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுவதை எதிர்க்கும் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் பிப்ரவரியிலிருந்து கூடுதலாக 10 சதவீத வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தீவு நாடான கிரீன்லாந்து, டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிரதேசமாக இருந்து வருகிறது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறார். இதற்காக ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயார் என கூறி உள்ளார். இதற்கு டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்த்து தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தனது சொந்த ஊரான புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சிற்கு சென்றுள்ள அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் இரவு தனது ட்ரூத் சமூக ஊடக தள பதிவில், ‘‘சீனாவும், ரஷ்யாவும் கிரீன்லாந்தை விரும்புகின்றன. இந்த விஷயத்தில் டென்மார்க்கால் ஒன்றும் செய்ய முடியாது. டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நாங்கள் எவ்வளவோ செய்துள்ளோம். இப்போது அவர்கள் திருப்பி தர வேண்டிய நேரம் வந்து விட்டது. கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுவதை எதிர்ப்பதால் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய 8 நாடுகளுக்கு வரும் பிப்ரவரி முதல் 10 சதவீத கூடுதல் வரி விதிக்கிறேன்.
அந்த நாடுகளில் இருந்து அனுப்பப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத கூடுதல் வரி பொருந்தும். வரும் ஜூன் 1ம் தேதிக்கும் கிரீன்லாந்தை வாங்குவதற்கான எந்த ஒப்பந்தமும் ஏற்படாவிட்டால் இந்த வரி 25 சதவீதமாக அதிகரிக்கும்’’ என மிரட்டி உள்ளார். இதன் மூலம் மேற்கண்ட நாடுகளை பேச்சுவார்த்தைக்கு வர டிரம்ப் நிர்பந்திப்பதால் இது நேட்டோ அமைப்பை பலவீனப்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளது. டிரம்பின் இந்த கிரீன்லாந்து வரி முற்றிலும் தவறானது என இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
