டாக்கா: வாழைப்பழத்திற்காக நடந்த தகராறில் இந்து தொழிலதிபர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் வங்கதேசத்தில் நடந்துள்ளது. வங்கதேசத்தின் காஜிபூர் மாவட்டம் கலிகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் லிட்டன் சந்திர கோஷ் (55). ஓட்டல் உரிமையாளர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மசூம் மியா (28). இவர் தனது வீட்டில் வாழைத் தோட்டம் வைத்துள்ளார். அதில் ஒரு வாழை மரத்தில் நன்கு பழுத்த வாழைக்குலை காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்த வாழைக்குலை, லிட்டன் சந்திர கோஷின் ஓட்டலில் இருந்ததை மசூம் நேற்று முன்தினம் பார்த்துள்ளார்.
இது குறித்து ஓட்டலுக்கு சென்று ஊழியர் ஒருவரிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். தகவலறிந்து மசூமின் தந்தை ஸ்வபன் மியா (55), தாய் மஜேதா காதுன் (45) ஆகியோர் ஓட்டலுக்கு வந்து லிட்டன் சந்திர கோஷிடம் கேட்டனர். இதில் வாக்குவாதம் முற்றி, மசூம் குடும்பத்தினர் லிட்டன் சந்திர கோஷை சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த லிட்டன் பரிதாபமாக இறந்துள்ளார். மசூம், ஸ்வபன், மஜேதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது, வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக சமீபகாலமாக அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
