திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 25ம் தேதி ரதசப்தமி உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி ஒரேநாளில் 7 வாகனங்களில் சுவாமி வீதிஉலா வந்து அருள்பாலிக்க உள்ளார். சூரிய ஜெயந்தியை முன்னிட்டு, வரும் ஜனவரி 25ம் தேதி திருமலையில் ரத சப்தமி கொண்டாடப்படும். இதனையொட்டி அன்று கோயில் மாடவீதிகளில் 7 வாகன சேவை நடைபெறும். மலையப்ப சுவாமி 5 வாகனத்திலும், 2 வாகனத்தில் தாயார்களுடன் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். வழக்கமாக பிரமோற்சவத்தின்போது சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி 9 நாட்கள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 9 நாட்கள் திருமலையில் தங்கி காணமுடியாத பக்தர்கள் இந்த ரதசப்தமியன்று ஒரேநாளில் 7 வாகன சேவையை தரிசிப்பார்கள். இதனை மினி பிரமோற்சவம் என அழைக்கப்படும். தை மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் சப்தமி நாள், ரத சப்தமி அல்லது தை சப்தமி என்று அழைக்கப்படுகிறது.
இந்த புனிதமான நாளில் சூரியதேவர் பிறந்து உலகம் முழுவதும் தனது ஒளியை பரப்பியதாக வேதங்களில் கூறப்படுகிறது. ரத சப்தமி விழாவைக் கொண்டாட திருமலைக்கு வருகை தரும் ஏராளமான பக்தர்களுக்காக தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்நிலையில் ரதசப்தமியன்று அதிகாலை 5.30 முதல் 8 மணி வரை சூர்யபிரபை வாகனம். (சூரிய உதயம் 6.45 மணிக்கு). காலை 9 முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனம், காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகனம், மதியம் 1 முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம், மதியம் 2 முதல் 3 மணி வரை சக்ரத்தாழ்வார் தீர்த்தவாரி, மாலை 4 முதல் 5 மணி வரை கற்பக விருட்ச வாகனம், மாலை 6 முதல் 7 வரை சர்வபூபால வாகனம், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளனர். ரதசப்தமி விழாவை முன்னிட்டு கோயிலில் நடைபெறும் நித்ய சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. சுப்ரபாதம், தோல்மாலை அர்ச்சனை ஆகியவை பக்தர்கள் இல்லாமல் நடைபெறும்.
