பனாஜி: கோவாவில் சுற்றுலா வந்த இரண்டு ரஷ்ய பெண்கள் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த எலினா வனீவா (37) மற்றும் எலினா கஸ்தனோவா (37) ஆகிய இரண்டு பெண்கள் சமீபத்தில் கோவாவிற்குச் சுற்றுலா வந்திருந்தனர். கடந்த 14ம் தேதி இரவு மோர்ஜிம் பகுதியில் தங்கியிருந்த எலினா வனீவா என்பவரும், கடந்த 15ம் தேதி அரம்போல் பகுதியில் தங்கியிருந்த எலினா கஸ்தனோவா என்பவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். எலினா கஸ்தனோவா கைகள் கட்டப்பட்ட நிலையில், கழுத்து அறுக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ரஷ்யாவைச் சேர்ந்த 37 வயது அலெக்ஸி லியோனோவ் என்பவரை மண்டேர்ம் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அரம்போல் பகுதியில் குற்றவாளி பதுங்கியிருந்தபோது அவரைப் பிடித்து விசாரித்தனர். பணப் தகராறு காரணமாக இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அலெக்ஸியிடம் விசாரித்த போது இதுவரை மொத்தம் 5 வெளிநாட்டுப் பெண்களைக் கொலை செய்துள்ளேன் என்று கூறியுள்ளான். போதைப்பொருள் பழக்கம் காரணமாக இவன் இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
