ஸ்ரீநகர்: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் வழக்கில் சீனத் தொடர்பு குறித்த முக்கிய ஆதாரங்களை என்ஐஏ அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் நடமாட்டத்தை கண்டறிய என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கோப்ரோ ஹீரோ 12 பிளாக் ரக கேமராவை ஆய்வு செய்தபோது, அது 2024ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி சீனாவின் டோங்குவான் பகுதியில் முதன்முதலில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.
ஏஇ குரூப் இன்டர்நேஷனல் என்ற சீன விநியோகஸ்தர் மூலம் இந்த சாதனம் கைமாறியுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக, சர்வதேச சட்ட உதவி கோரி நேற்று சிறப்பு நீதிமன்றம் மூலம் சீன அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கேமராவின் இறுதிப் பயனாளர் யார்? எவ்வாறு தீவிரவாதிகளின் கைக்கு இது கிடைத்தது? என்பது குறித்து விரிவான தகவல்களை வழங்குமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து என்ஐஏ தரப்பில் கூறுகையில், ‘தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கேமரா மிகவும் முக்கியமானது.
இதன் மூலம் தீவிரவாத குழுக்களின் நடமாட்டம் மற்றும் அவர்களின் ரகசிய திட்டங்களை கண்டறிய முடியும். சீனாவில் இருந்து விநியோகிக்கப்பட்ட இந்த சாதனம் யாருடைய பெயரில் வாங்கப்பட்டது என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம். இந்த கேமரா தொடர்பான தரவுகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்களை அடையாளம் காண்பதன் மூலம் தீவிரவாத வலைப்பின்னலை முழுமையாக முறியடிக்க முடியும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் பிற அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும் போலீசார் இந்த வழக்குடன் இணைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
