மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வேண்டும் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கர்நாடக முதல்வர் ஆதரவு

பெங்களூரு: மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கர்நாடகாவின் முழு ஆதரவை தெரிவித்து அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல – அது நமது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பாகும். பல ஆண்டுகளாக, நிதி மற்றும் சட்ட விவகாரங்களில் அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவிக்கப்படுவது, நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்த சமநிலையைச் சீர்குலைத்துள்ளது.

மாநிலங்களுக்கு தரப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்ற, அவற்றுக்கு உரிய அதிகாரமும், நிதி சுதந்திரமும் இருக்க வேண்டும். இந்தியாவின் வலிமையே அதன் கூட்டுறவு கூட்டாட்சி, அரசியலமைப்பு மீதான நம்பிக்கை மற்றும் பன்முகத்தன்மையை மதிப்பதில் தான் உள்ளது. அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து விவாதிக்கவும், கூட்டாட்சி தத்துவத்தில் சமநிலையை மீட்டெடுக்கவும் வலுவான தளத்தை ஒன்றிய அரசு அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்துவேன். இந்தியாவின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஆக்கபூர்வமாக பங்களிக்க கர்நாடகா தயாராக உள்ளது என்று கூறி உள்ளார்.

Related Stories: