புதுடெல்லி: உலக ஒழுங்கை வரையறுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை பிரதமர் மோடி ஆதரிக்கிறாரா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நடந்து வரும் சூழலில் , உலக ஒழுங்கை வரையறுக்கும் ஒரு படியாக ஒரு நாட்டின் தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா என்று பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். ஈரான் மீதான ஒருதலைப்பட்ச தாக்குதல்களும், மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் அமைதி காப்பது உலகளவில் இந்தியாவின் அந்தஸ்தை குறைக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் மோதல்கள் பதற்றமான பிராந்தியத்தை பரந்த மோதலுக்குத் தள்ளுகின்றது. இதனால் உங்கு உள்ள ஒரு கோடி இந்தியர்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான பேர் நிச்சயமற்ற தன்மையில் உள்ளனர்.
பாதுகாப்பு கவலைகள் ஒருபுறம் இருந்தாலும், இறையாண்மையை மீறும் தாக்குதல்கள் நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது. ஈரான் மீதான ஒருதலைப்பட்ச தாக்குதல்களும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானின் தாக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டும். வன்முறை மேலும் வன்முறையை உருவாக்குகிறது. இந்தியா தார்மீக ரீதியாக தெளிவாக இருக்க வேண்டும். சர்வதேச சட்டம் மற்றும் மனித உயிர்களை பாதுகாப்பதில் நாம் வெளிப்படையாகப் பேச தைரியம் கொண்டிருக்க வேண்டும். நமது வெளியுறவுக் கொள்கை இறையாண்மையிலும், சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பதிலும் வேரூன்றியுள்ளது.உலக ஒழுங்கை வரையறுக்கும் ஒரு பகுதியாக ஒரு நாட்டின் தலைவரின் படுகொலையை மோடி ஆதரிக்கிறாரா. இவ்வாறு அதில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
