16 முறை தீர்மானம் நிறைவேற்றியும் ஒன்றிய அரசிடம் பதில் இல்ல… புதுச்சேரி மாநில அந்தஸ்து ஓரணியில் அரசியல் கட்சிகள்: தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டசபையில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் ஒன்றிய அரசு எந்த பதிலும் சொல்லாமல் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரிக்கு கடந்த 1ம் தேதி சென்ற பிரதமர் மோடி, ரூ.2,714 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசினார். இவ்விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ‘‘ஒன்றிய அரசு எத்தனை திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தினாலும், புதுச்சேரி மக்களின் பலஆண்டு கோரிக்கையான மாநில அந்தஸ்து, தனி அதிகாரத்தை பிரதமர் மோடி வழங்க வேண்டும்.

சட்டமன்றத்தில் 16 முறை இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டும் எங்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருப்பது வலியும், வருத்தமும் அளிக்கிறது’’ மேடையிலேயே கொந்தளித்தார். இதேபோல் அதிமுகவும் மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை பிரதமரை சந்தித்து வழங்கியது. ஆனால் பிரதமர், இவ்விவகாரம் தொடர்பாக எந்த உத்தரவாதமும் தராமல் புதுச்சேரி பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக மாநில அந்தஸ்து கோரிக்கை நிறைவேற ரங்கசாமி, தேர்தலை புறக்கணித்தால் திமுக புறக்கணிக்கும் என மாநில அமைப்பாளர் சிவா அறிவித்தார். மாநில அந்தஸ்துக்காக சட்டசபை தேர்தலை ரங்கசாமி புறக்கணித்தால், காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தெரிவித்துள்ளார்.

இதேபோல் இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட மற்ற கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென்ற பார்முலாவை இதுவரை இல்லாத வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர். தேர்தல் கூட்டணி, அரசியலை கடந்து மக்களுக்கான ஒட்டுமொத்த புதுச்சேரி கட்சிகளின் ஒருங்கிணைந்த குரலாக இது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஒலித்தால், தேர்தல் துறைக்கு மிகுந்த சவாலாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

Related Stories: