தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி: திமுக, அதிமுக இன்று வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26ம் தேதி (வியாழன்) தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5ம் தேதி (நாளை) கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி கடைசி நாளாகும்.

மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் தம்பிதுரை, ஜி.கே.வாசன், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போதுள்ள எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பி.,க்களையும், அதிமுக 2 எம்.பி.,க்களையும் தேர்வு செய்ய முடியும்.

தமிழகத்தை பொறுத்தவரை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் சென்னை, தலைமை செயலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, சட்டப்பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் சாந்தியை தேர்தல் நடத்தும் அலுவலராகவும், செயலாளர் தேன்மொழியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. அவர்களிடம் மனு வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5ம் தேதி (நாளை) கடைசி நாளாகும். இதுவரை சேலம், மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், திருச்சியை சேர்ந்த கே.பி.எம்.ராஜா, சென்னை, அம்பத்தூரை சேர்ந்த டி.கே.மேஷாக் கிருபாகரன் ஆகிய 3 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இதுவரை அரசியல் கட்சிகளை சேர்ந்த யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதனால், திமுக மற்றும் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக யார் போட்டியிடுவார்கள் என்ற அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது. திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் வெற்றிபெற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மாநிலங்களவை சீட் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளும் நெருக்கடி கொடுக்கலாம் என்பதால் திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பதில் காலதாமதம் ஆகிறது.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் சார்பில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த கட்சிகளும் இன்று வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, கட்சி சார்பில் அறிவிக்கப்பட உள்ள வேட்பாளர்கள் இன்று மாலை அல்லது நாளை வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருந்தால், வாக்குப்பதிவு மார்ச் 16ம் தேதி நடைபெறும். அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் 6 ஆண்டுகள். தமிழகத்தை பொறுத்தவரை, அரசியல் கட்சிகள் சார்பில் 6 பேர் மட்டுமே போட்டியிட வாய்ப்புள்ளதால், தேர்தல் நடைபெறாமல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே அதிகம் உள்ளது.

Related Stories: