பாட்னா: பீகாரில் காய்ச்சலால் தற்கொலை என்று அரசு கூறிய நிலையில் நீட் மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்த தகவல் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர், பாட்னாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி நீட் தேர்வுக்குப் படித்து வந்தார். கடந்த 9ம் தேதி விடுதி அறையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர், 11ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீசார் முதலில் கூறினர். ஆனால், மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகப் பெற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது.
பிரேத பரிசோதனையை நடத்திய பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள், மாணவியின் உடலில் பல புதிய காயங்கள் இருந்ததாகவும், அவை அனைத்தும் அவள் இறப்பதற்கு முன்பு ஏற்பட்டதாகவும், மாணவியின் கழுத்து மற்றும் தோள்களில் ஆழமான ஆணி அடையாளங்கள் உள்ளன, மேலும் மாணவி வலுக்கட்டாயமாக போராடி இருக்கிறாா். அவரது மார்பு மற்றும் தோள்களில் கீறல் அடையாளங்களும் இருந்தன. அவரது முதுகிலும் உள்ள காயங்களை பார்க்கும் போது, இந்த தாக்குதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம்.
மாணவியின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்பட்ட காயங்கள் தொடர்பானவை மிகவும் தீவிரமானவை. ஆழமான சிராய்ப்புகள் மற்றும் ரத்தப்போக்கு உள்ளிட்ட புதிய மற்றும் கடுமையான காயங்கள் உள்ளன. இது மாணவி பலவந்தமான பாலியல் வன்கொடுமையின் விளைவால் ஏற்பட்ட காயம் ஆகும். பலாத்கார தாக்குதலின் போது மாணவி சுயநினைவுடன் இருந்துள்ளார். அவர் தனது கடைசி மூச்சு வரை தன்னைப் பாதுகாத்துக் கொள்ள போராடினார் என்பதை காயங்கள் நிரூபிக்கின்றன. இருப்பினும் மரணத்திற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த கூடுதல் பரிசோதனைகளுக்காக மாதிரிகள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டு இருந்தது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து பீகார் டிஜிபி இந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய உயர் மட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளார். மாணவி பலி தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, விடுதி உரிமையாளர் மனிஷ் குமார் ரஞ்சன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே மாணவி மரணம் தொடர்பான வழக்கை முதலில் விசாரித்த புலனாய்வு அதிகாரி (ஐஓ) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
