வேலூர்: வேலூர்- ஆற்காடு சாலையில் உள்ள சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் வசித்து வந்ததாகவும், அவருடன் 4 டாக்டர்கள் குடியிருப்பில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் அந்த டாக்டர்கள் குடியிருப்புக்கு அமலாக்கத்துறையினர் 2 வாகனங்களில் திடீரென வந்து, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் உதவியுடன் குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர்.
நேற்றிரவு இரவு வரை சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்து வருகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக சோதனை நடக்கிறது என தெரியவில்லை. மருத்துவமனைக்கு மருந்துகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததா?, அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சிஎம்சி மருத்துவமனை இயக்குனர் விக்ரம் மேத்யூஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சிஎம்சி வளாகத்தில் எந்த விதமான ஈடி சோதனை, விசாரணை அல்லது நடவடிக்கையும் நடைபெறவில்லை.
நிறுவனம் வழக்கம் போல் இயல்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு பணியாளருக்கு குடியிருப்பு வசதிக்காக ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட எந்தவித நடவடிக்கையும் சிஎம்சி அல்லது அதன் செயல்பாடுகளுடன் எந்தவித தொடர்பும் இல்லை. வேலூர் சிஎம்சியில் நடைபெறும் ஈடி நடவடிக்கை என்பது உண்மைக்கு புறம்பானதும், தவறானதாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.
* சோதனைக்கு இடையிலும் உணவு டெலிவரி
வேலூர் தோட்டப்பாளைத்தில் உள்ள டாக்டர்கள் குடியிருப்பில் சோதனை நடந்த நிலையில் காலை 10.30 மணியளவில் குடியிருப்பில் உள்ளவர்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளனர். அந்த உணவை டெலிவரி செய்ய, டெலிவரி நபர் ரெய்டு நடக்கும் குடியிருப்புக்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார் உணவினை சோதனை செய்த பிறகு பெற்றுக்கொண்டனர். அதேபோல், குடியிருப்பில் உள்ள ஒருவரை ஐடி கார்டு காண்பித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளித்தனர்.
