நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ரூபாய் நோட்டு சிக்கிய விவகாரம் சபாநாயகர் அமைத்த விசாரணைக் குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

புதுடெல்லி: கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி டெல்லியில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது, அங்கு கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதுதொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட நீதித்துறை உள்விசாரணையில், அந்தப் பணம் நீதிபதியின் மறைமுக அல்லது நேரடி கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கண்டறியப்பட்டு, அவரைப் பதவி நீக்கம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவால் அமைக்கப்பட்ட மூன்று நபர் விசாரணைக் குழு சட்டவிரோதமானது எனக் கூறி நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை செயலாலர் பதிலளிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16ம் தேதி நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் 8ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,‘‘கடந்த 1968ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 3(2)ன் கீழ் குழு அமைக்கப்பட்டிருப்பது, சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதற்கும், பாதுகாக்கப்படுவதற்கும் தனக்குள்ள உரிமையை மீறுவதாக உள்ளது.

மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரே நாளில் பதவி நீக்க தீர்மானங்களுக்கான அறிவிப்புகள் வழங்கப்பட்டபோதிலும், சபாநாயகர் தன்னிச்சையாகவே குழுவை அமைத்தார். இது ஏற்க கூடியது கிடையாது என்று தெரிவித்தார். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில்,‘‘இந்த விவகாரத்தில் சபாநாயகர் அமைத்த விசாரணைக் குழுவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அவர்கள் தொடர்ந்து செயல்படலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், யஷ்வந்த் வர்மாவின் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: