10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது இந்தியாவால் 8 வாரம் சமாளிக்க முடியும்: இறக்குமதி செலவு அதிகரிப்பதால் பெட்ரோல், காஸ் விலை உயர வாய்ப்பு

புதுடெல்லி: இந்தியாவிடம் பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருட்களுக்கான உள்நாட்டு தேவையை 6 முதல் 8 வாரங்களுக்கு பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போரை உருவாக்கி உள்ளது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதால் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகம் சீர்குலைந்துள்ளது. குறிப்பாக, பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் குறுகலான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடி உள்ளது. இவ்வழியாக எண்ணெய் கப்பல்கள் சென்றால் தாக்குதல் நடத்துவதாகவும் மிரட்டி உள்ளது.

உலகின் கடல்வழி கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதிகளில் சுமார் 20 சதவீதமும் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்கின்றன. இந்தியாவின் தினசரி 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதி வருகிறது. தற்போது ஈரானின் மிரட்டால் அங்கு 780க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பல்கள் தேக்கமடைந்து நிற்கின்றன. இந்த போர் குறைந்தது 5 வாரங்களுக்கு நீடிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சூழலில், மத்திய கிழக்கு போர் சூழலை சமாளிக்கும் அளவுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் இருப்பதாக ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சேமிப்பு தொட்டிகள், குழாய்கள் மற்றும் போக்குவரத்தில் உள்ள கப்பல்கள் மூலமாக நாட்டின் 25 நாட்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. அதே அளவுக்கு மங்களூர், படூர், விசாகப்பட்டினத்தில் உள்ள சேமிப்பு தளங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவற்றில் கச்சா எண்ணெய் கைவசம் உள்ளது. மொத்தம் 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் உள்ளன. இதனால் இந்தியாவால் 6 முதல் 8 வாரங்கள் வரை நிலைமையை சமாளிக்க முடியும்.

அதன் பிறகும் போர் நீடித்தால், வேறு பிற வணிக வாய்ப்புகளும் நம்மிடம் உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, மேற்கு ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்க முடியும். எனவே, பெட்ரோல், காஸ் உடனடி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. இந்தியா ஒரு வசதியான சூழலில் இருக்கிறோம். அதே சமயம், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் அதிக சரக்கு மற்றும் காப்பீட்டு செலவுகளால் இறக்குமதி செலவு அதிகரித்து பணவீக்கம் பாதிக்கப்படலாம்.

இதன் காரணமாக, பெட்ரோல், காஸ் விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். ஒன்றிய எண்ணெய் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், ‘‘மத்திய கிழக்கிலிருந்து எழும் குறுகிய கால இடையூறுகளைச் சமாளிக்க, கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட முக்கிய பெட்ரோலியப் பொருட்களின் சரக்குகள் போதுமான கையிருப்பில் உள்ளன. நாடு முழுவதும் பெட்ரோலிய பொருட்களின் விநியோகம் மற்றும் இருப்பு நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க அமைச்சகம் 24×7 கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது’’ என்றார்.

* இந்திய மாலுமிகள் 3 பேர் பலியாகினர்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எண்ணெய் கப்பல்கள் மீதும் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் வெளிநாடுகளுக்கு சொந்தமான கப்பலில் இருந்த 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், பாரசீக வளைகுடா, ஹார்முஸ் ஜலசந்தி, ஓமன் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதிகளில் கடல்சார் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. கப்பல் நிறுவனங்கள் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதில் உரிய எச்சரிக்கையுடன் இருக்கவும், கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் வழக்கமான தொடர்பைப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: