குன்னூர், ஜன. 7: ஹைபீல்டு சாலையில் வாகனங்கள் விபத்து ஏற்படும் விதமாக சாலையோரத்தில் வெட்டப்பட்டுள்ள மரங்களை அகற்ற வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள ஹைபீல்டு பகுதிக்கு செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக அவ்வழியாக சிம்ஸ்பூங்கா தோட்டக்கலை அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஹைபீல்டு தேயிலை தோட்டம் போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக உள்ளது. அப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சாலையில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்றது.
ஆனால் அப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்கள் சாலையின் இருபுறத்திலும் விட்டு சென்றதால் இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் வாகனங்கள் சாலையின் ஓரத்தில் மரம் இருப்பதை அறியாமல் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே அவ்வழியாக ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் வைக்கப்பட்டுள்ள மரத்தை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் தாமாக முன்வந்து அகற்ற வேண்டுமென்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
