மின்னா: நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பல் ஒரு கிராமத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 40 பேர் பலியானார்கள். நைஜீரியாவில் வடக்கு பகுதியில் நைஜர் மாகாணம் உள்ளது. அங்கு உள்ள கசுவான் தாஜி என்ற கிராமத்திற்குள் நேற்று முன்தினம் புகுந்த ஆயுதமேந்திய நபர்கள் அங்கிருந்த வீடுகள், உள்ளூர் சந்தை ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். மேலும் பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 30 பேர் பலியானார்கள் என்று நைஜர் போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால் உள்ளூரில் வசிக்கும் மக்கள் கூறுகையில், இந்த சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காணமால் போயுள்ளனர். பாதுகாப்பு படையினர் இன்னும் அப்பகுதிக்கு வரவில்லை என்றனர்.
கத்தோலிக்க தேவாலய செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் கபிரட்,‘‘துப்பாக்கி சூட்டில் 40 பேர் பலியானார்கள். ஏராளமான சிறுவர்களையும் வன்முறை கும்பல் கடத்தி சென்றது’’ என்றார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இந்த மாகாணத்தில் இது போன்ற ஆயுதமேந்திய குழுக்களின் தாக்குதல்கள் அடிக்கடி நடக்கின்றன. நகரங்களில் இருந்து வெகு தொலைவில் வசிக்கும் ஒதுக்குப்புறமான கிராமங்களை குறி வைத்து கும்பல்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
