வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு சலுகைகளை அனுபவிக்கும் வெளிநாட்டினரின் பட்டியலை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள நிலையில், அதில் இந்தியாவின் பெயர் இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று, வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் அமெரிக்க அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவது தொடர்பான புள்ளிவிவரப் பட்டியலை வெளியிட்டார். சுமார் 120 நாடுகள் அடங்கிய இந்தப் பட்டியலில் பூடான் (81.4 சதவீதம்), ஏமன் (75.2 சதவீதம்), சோமாலியா (71.9 சதவீதம்) போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன.
மேலும் இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம் (54.8 சதவீதம்), பாகிஸ்தான் (40.2 சதவீதம்), நேபாளம் (34.8 சதவீதம்) மற்றும் சீனா (32.9 சதவீதம்) ஆகியவையும் இதில் இடம்பிடித்துள்ளன. அமெரிக்கப் பொருளாதாரத்திற்குச் சுமையாக இல்லாமல் பங்காற்றும் குடியேறிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் 120 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம்பெறவில்லை என்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ‘அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குடும்பங்கள் அரசின் இலவசச் சலுகைகளை மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்துகின்றனர்;
அவர்களின் வருமானம் மிக அதிகமாக இருப்பதால் இந்தப் பட்டியலில் இந்தியா சேர்க்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 2023ம் ஆண்டு நிலவரப்படி இந்தியக் குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் 1,51,200 டாலராக உள்ளது. இது மற்ற ஆசியக் குடும்பங்களின் வருமானத்தை விட மிக அதிகமாகும். மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் இந்தியர்கள் அதிகளவில் பணியாற்றுவதும், அவர்களின் பொருளாதாரத் தன்னிறைவுமே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
