காரகாஸ்: வெனிசுலா அதிபர் மதுரோ கைது செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைதான நிலையில், அந்நாட்டின் அதிபர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், நாட்டின் நிர்வாகத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் துணைஅதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அதிபர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரோவின் ‘கட்டாயமான இல்லாமை’ காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
பொதுவாக அதிபர் நிரந்தரமாகப் பணி செய்ய முடியாத சூழலில் 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், மதுரோ விவகாரத்தில் நீதிமன்றம் அவரை நிரந்தரமாகப் பதவி இழந்தவராக அறிவிக்காததால், டெல்சி ரோட்ரிக்ஸ் எவ்வளவு காலம் இப்பதவியில் நீடிப்பார் என்பது குறித்த தெளிவான விபரங்கள் வெளியாகவில்லை. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘டெல்சி ரோட்ரிக்ஸ் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ளார்; அவர் அமெரிக்காவுடன் இணக்கமாகச் செயல்படத் சம்மதித்துள்ளார்’ என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அரசுத் தொலைக்காட்சியில் பேசிய டெல்சி ரோட்ரிக்ஸ், ‘நிக்கோலஸ் மதுரோ மட்டுமே வெனிசுலாவின் ஒரே அதிபர்; அமெரிக்காவின் நடவடிக்கை சட்டவிரோதமான ஆள்கடத்தல் ஆகும்’ என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மேலும், ‘மதுரோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்திய அவர், டிரம்பின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். மற்றொரு தரப்பில், எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ, எட்மண்டோ கோன்சலஸ் உருட்டியாவைத் தான் உண்மையான அதிபராக உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.
