இந்தூர்: இந்தூரில் பலியானவர்கள் எண்ணிக்கை 15ஆக உயர்ந்த நிலையில், அனைவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட காரணம் அசுத்தமான குடிநீர் தான் என்பது ஆய்வக சோதனயைில் உறுதியாகி உள்ளது. பாஜ ஆளும் மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பகீரத்புரா பகுதியில் மாநகராட்சி விநியோகித்த குடிநீர் மாசடைந்து இருந்ததாகவும் அதனை குடித்த 8 பேர் உயிரிழந்ததாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இந்த குடிநீரை குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர்.
பகீரத்புரா பகுதியில் கழிப்பறை கட்டப்பட்டு இருந்த இடத்தில் பிரதான குடிநீர் விநியோக குழாயில் கசிவு கண்டறியப்பட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் அந்த பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீர் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் பொதுமக்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டதற்கு அசுத்தமான குடிநீர் தான் காரணம் என்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்து உள்ளது. மருத்துவமனையில் 1500 பேர் சிகிச்சை பெற்று வருவது மபி பா.ஜ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் முதல்வர் மோகன் யாதவ் அறிவுறுத்தலின்பேரில் பகீரத்புரா பகுதியில் கூடுதல் தலைமை செயலாளர் சஞ்சய் துபே நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், குடிநீர் விநியோக குழாயில் வேறு எங்கும் குடிநீர் கசிவு உள்ளதா என்பதை கண்டறிய முழு குடிநீர் விநியோக குழாயையும் ஆய்வு செய்து வருகிறோம்.ஆய்வுக்கு பின் பகீரத்புராவில் உள்ள வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. எனினும் பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
இது குறித்து சுகாதார துறை அதிகாரி கூறுகையில், பகீரத்புராவில் 1714 வீடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுபில் 8571 பேர் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில் வாந்தி வயிற்றுப்போக்குக்கான அறிகுறிகளுடன் இருந்த 338 பேருக்கு வீடுகளிலேயே முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. நோய்த்தொற்று பரவத்தொடங்கிய 8 நாட்களில் 272 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 71 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 32 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும், 201 பேர் சாதாரண வார்டுகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* நிவாரணத்தொகை ஏற்க மறுப்பு
இந்தூரில் மாசடைந்த குடிநீரால் 6 மாத ஆண் குழந்தையான அவ்யான் சாஹூம் உயிரிழந்துள்ளான். 10 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்ததால் அந்த குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். பால் பவுடரை நீரில் கலந்து கொடுத்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு ரூ.2லட்சம் நிவாரணம் வழங்கிய நிலையில் அவ்யான் குடும்பத்தினர் நிவாரணத் தொகையை ஏற்க மறுத்துள்ளனர்.
* ஏழைகள் இறக்கும்போதெல்லாம் பிரதமர் மவுனம்: ராகுல்காந்தி ஆவேசம்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், மத்தியப்பிரதேசம் மோசமான நிர்வாகத்தின் மையமாக மாறியுள்ளது. இருமல் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள், அரசு மருத்துவமனையில் எலிகள் குழந்தைகளை கொல்வதும் இப்போது கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. ஏழைகள் இறக்கும்போதெல்லாம் பிரதமர் மோடி ஜீ வழக்கம் போல் மவுனமாக இருக்கிறார். இந்தூரில் விநியோகிக்கப்பட்டது தண்ணீர் அல்ல. விஷம். ஆனால் நிர்வாகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் சூழ்ந்துள்ளது. ஏழைகள் நிர்கதியாக உள்ளனர்.
