சந்திக்க தொடர்ந்து மறுத்து வருவதால் சிறை முன்பு இம்ரான்கான் சகோதரிகள் போராட்டம்: போலீஸ் குவிப்பால் பெரும் பதற்றம்

 

இஸ்லாமாபாத்: சிறையில் உள்ள இம்ரான் கானை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், அவரது சகோதரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வாரம் இருமுறை அதாவது செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சந்திக்க குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இந்த உத்தரவை மதிக்காமல் சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சந்திப்புக்கு அனுமதி மறுத்து வருவதாக இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

அவரை தனிமைப்படுத்தி மன ரீதியாக துன்புறுத்துவதாக அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இம்ரான் கானை சந்திப்பதற்காக அவரது சகோதரிகள் அலிமா கான், நோரீன் நியாசி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிறைக்குச் சென்றனர். ஆனால் அவர்களுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சிறைக்கு செல்லும் வழியில் உள்ள சோதனைச் சாவடி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை சமாளிக்க அங்கு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டதுடன், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

ஏற்கனவே கடந்த 17ம் தேதி நடந்த போராட்டத்தின் போது இம்ரான் கானின் சகோதரிகள் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக இந்த சந்திப்புகள் தடுக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், பிப்ரவரி 2026 வரை பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Related Stories: