திருமயம், டிச.19: திருமயத்தில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நாட்டில் மக்களிடையே மதக்கலவரங்களை தூண்டு வகையிலும் நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனிடையே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பெயரை மாற்றி விக்சித் பாரத் கிராம்ஜி என பெயர் மாற்றம் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்திருந்தது.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை ஒன்றிய அரசு சற்றும் பொருட்படுத்தாமல் நேற்று நாடாளுமன்றத்தில் கடும் அமலிகளுக்கு இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கான மசோதாவை நிறைவேற்றியது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமயம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து குரல் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர் முருகேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் பிரபு, நகர தலைவர் அன்பழகன் உள்ளிட்ட திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
