வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய 37 பேருக்கு ரூ.3.70 லட்சம் அபராதம்

சேந்தமங்கலம், மார்ச் 18: எருமப்பட்டி அருகே வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய 37 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.3.70 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் பாலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதியில் மர்ம நபர்கள், இறைச்சிக்காக வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாமக்கல் ரேஞ்சர் பழனிசாமி தலைமையில், வனத்துறையினர் வனப்பகுதியில் சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது 37 பேர் கொண்ட ஒரு கும்பலை, வனத்துறையினர் மடக்கி பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அந்த கும்பல் திருச்சி மாவட்டம் வீரப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், 30 முயல்களை வேட்டையாடியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட வன அலுவலர் மாதவி யாதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார், காப்புக்காடு வனப் பகுதியில் அத்துமீறி தனி நபர்கள் நுழையக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும், வனப்பகுதிக்குள் நுழைந்து அத்துமீறி முயல் வேட்டையில் ஈடுபட்ட 37 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் என ரூ.3.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: