பென்னாகரம், மார்ச் 18: பென்னாகரம் அருகே பறக்கும்படை சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தலையொட்டி, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் வருவாய்துறை அதிகாரிகள், போலீசார் இடம் பெற்றுள்ளனர். இந்த பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரியாம்பட்டி கிராமத்தில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் முருகன் தலையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரில் கோடல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.53 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆறுமுகம் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
