தர்மபுரி, மார்ச் 18: பென்னாகரம் அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை மோசடி செய்த விஏஓ உள்பட 8 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(41), டிரைவர். இவர் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், எங்களுக்கு சொந்தமான பட்டா நிலம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், அந்த நிலத்தை ராமகொண்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்(32), என்பவர் போலி ஆவணம் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி விஏஓ கார்த்திக், அதே பகுதியை சேர்ந்த செல்வி(40), ரத்தினம்மாள்(60), ஈஸ்வரி(43), அருணா(32), செல்வராஜ்(47), வெங்கடேஸ்வரன்(35), பூமலை(23) ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
