சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களில் கடந்த 1ம் தேதி முதல் அனைத்து வழக்குகளையும் இ-பைலிங் முறையில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாக உத்தரவின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-சேவை மையங்களில் ஒரு வழக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் பல மணி நேரம் காத்து நிற்கும் சூழலும், அதனால் வழக்கறிஞர்களின் அன்றாட பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடந்த 2 வாரங்களாக தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் இ-பைலிங் நடைமுறையை கண்டித்தும், போதிய உள்கட்டமைப்பு இல்லாமல் அதை அமலுக்கு கொண்டு வந்துள்ளதை எதிர்த்தும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசு இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சுமுகமாக தீர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
