மல்லை சத்யாவின் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு

சென்னை: மதிமுகவில் முதன்மை செயலாளர் துரை, துணை பொதுச்செயலர் மல்லை சத்யா ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வந்தது. இந்நிலையில், ‘சத்யா தனக்கு துரோகம் இழைத்து விட்டார்’ என, பொதுச்செயலர் வைகோ குற்றஞ்சாட்டினார். இதை தொடர்ந்து வைகோவுக்கு எதிராக, மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதையடுத்து, மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதோடு, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு சத்யா பதில் அளித்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்தார்.

இந்நிலையில் மல்லை சத்யா தரப்பு வழக்கறிஞர் மயில்சாமி தேர்தல் ஆணையத்தில் ஒரு விண்ணப்பம் தாக்கல் செய்து அதனை பதிவு செய்துள்ளார். அதில், “திராவிட வெற்றிக் கழகம் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆவணங்களும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மல்லை சத்யா அளித்த பேட்டி: திராவிட வெற்றிக் கழகத்தை பொறுத்தமட்டில் வரும் 2026ம் ஆண்டு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தேர்தல் போட்டியிடுவோம். வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தில் திமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதே எங்களது முதன்மையான குறிக்கோளாக இருக்கிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கும், எங்களது திராவிட வெற்றிக் கழகத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. எனவே பெயரில் சிக்கல் ஏற்படாது. தேர்தல் அறிவிப்பு வரும்போது கண்டிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களது வேண்டுகோளை வைப்போம் என்றார்.

Related Stories: