ஆரணி, டிச.19: களம்பூர் அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டு உடைத்து ஏடிஎம் கார்டை திருடிச்சென்று பணம் எடுத்தவர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அடுத்த கைகிளாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (69), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி அம்பிகா (63). இவர்களது மகன் சஞ்சய் (29). இவரும் தற்போது ராணுவத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி முருகேசன் தனது மனைவியுடன் அங்குள்ள நிலத்திற்கு சென்று விவசாய பணிகளை கவனிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்றுபார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், ஏடிஎம் கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் திருடுபோனது தெரிந்தது. இதனிடையே திருடப்பட்ட ஏடிஎம் கார்டில் இருந்து ரூ.70 ஆயிரம் எடுக்கப்பட்டதாக முருகேசன் செல்போனுக்கு மெசேஜ் வந்தது.
இதுகுறித்த புகாாரின்பேரில் களம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அதேபகுதியை சேர்ந்த மயில்வாணன் (48) என்பவர் பணம் எடுத்தது தெரியவந்தது. இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி சூபர்வைசராக பணிபுரிகிறார். அடிக்கடி முருகேசன் வீட்டுக்கு வந்து நட்பாக பேசிவிட்டு செல்வாராம். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது பூட்டு உடைத்து திருடியது தெரிந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடினர். இதனிடையே களம்பூர் ரயில் நிலையம் அருகே நேற்றுமுன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், எஸ்எஸ்ஐ தன்ராயன் மற்றும் போலீசார் வாகன தணிக்கை நடத்தியபோது அவ்வழியாக டூவீலரில் வந்த மயில்வாணன் பிடிபட்டார். இதையடுத்து அவரிடம் இருந்த திருடபோன ஏடிஎம் கார்டு மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து ஆரணி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
