ராணுவ வீரர் வீட்டில் பணம், ஆவணங்கள் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை களம்பூர் அருகே

ஆரணி, டிச.18: களம்பூர் அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டு உடைத்து பணம் மற்றும் ஆவணங்களை மர்மநபர் திருடிச்சென்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அடுத்த கைகிளாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (69), விவசாயி. இவரது மனைவி அம்பிகா (63). இவர்களது மகன் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதால், பெற்றோர் இருவரும் விவசாயம் செய்து கொண்டு வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி முருகேசன் அவரது மனைவி இருவரும் வழக்கம்போல் நிலத்திற்கு சென்று வேலை செய்துள்ளனர். பின்னர், விவசாய பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். மேலும் அவர்களது வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து களம்பூர் காவல் நிலையத்தில் அம்பிகா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வீடு புகுந்து திருடிய மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

Related Stories: