கோவை, டிச. 17: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்ட திராவிட நகர நாகரிகம். உலகளாவிய அகழாய்வு அறிஞர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை வெண்கல காலத்துக்குரியது என வரலாற்று பூர்வமாகவும் ஆதாரத்துடன் நிறுவியுள்ளனர். இந்நிலையில் சிந்து சரஸ்வதி நாகரிகம் என்னும் தலைப்பில் இரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றை தென்னிந்திய ஆய்வு மையம் என்கிற ஆர்எஸ்எஸ் துணை அமைப்புடன் இணைந்து கோவையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரி நடத்துவதாக செய்தி வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பங்கேற்கிறார் என்னும் செய்தியும் வந்துள்ளது. தமிழ்ப் புலிகள் கட்சி இந்த நிகழ்ச்சியை வன்மையாக கண்டிக்கிறது.
உயர்கல்வி வளாகங்களில் அறிவார்ந்த கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகள் தன்னெழுச்சியாக நடைபெற வேண்டும் என்பதே தமிழ் புலிகள் கட்சியின் கருத்து. ஆனால் இத்தகைய நிகழ்வுகள் கருத்துதிணிப்புக்கான வரலாற்றை திருடுவதாக வரலாற்றை திரிப்பதாக அமைந்து விடக்கூடாது. இதுவரை தமிழக உயர்கல்வி வளாகங்களில் நடக்கும் பன்னாட்டு கருத்தரங்குகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளை பயன்படுத்தி வருவது மரபாக உள்ளது. ஆனால் இக்கருத்தரங்கத்தில் பன்னாட்டு மொழிகள் இல்லை. இந்தியிலும், சமஸ்கிருதத்திலும் ஆய்வு கட்டுரைகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே வரலாற்று திரிப்பு கருத்தரங்கம் நடத்தும் தனியார் கலை அறிவியல் கல்லூரியை அனைத்து முற்போக்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் முற்றுகை போராட்டம் நாளை மறுநாள் 19ம் தேதி காலை 9 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் புலிகள் கட்சியும் பங்கேற்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
