சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவப்படை, போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

மேட்டுப்பாளையம், மார்ச் 12: மேட்டுப்பாளையத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் துணை ராணுவப்படையின் (சிஆர்பிஎப்) உதவி கமாண்டர் பிந்து மேத்யூ தலைமையில் நேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆயுதம் தாங்கிய போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ள நிலையில் முக்கிய அரசியல் கட்சிகளின் தேர்தல் தொடர்பான பணிகள் துவங்கியுள்ளன.

தொகுதியில் உள்ள அனைவரும் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாகவும், தேர்தல் அமைதியாக நடைபெறவும், தேர்தல் காலத்தில் சட்ட விதிகளுக்கு புறம்பாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் விதமாகவும் ஆயுதம் தாங்கிய மத்திய துணை ராணுவ படையினர் 73 பேர் மற்றும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். பேண்ட் வாத்தியம் முழங்க நவீன ஆயுதங்கள் தாங்கிய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறை டிஎஸ்பி பாஸ்கர், ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் காவல்துறை கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர். கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூட்டுறவு காலனி பகுதியில் துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.

Related Stories: