சிக்னல் முறை வெற்றி அடையாததால் நவஇந்தியா சந்திப்பில் மீண்டும் யூ-டர்ன் முறை அமல்

கோவை, மார்ச் 12: கோவை நகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் ஒன்றான நவஇந்தியா சந்திப்பில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 4 திசைகளிலும் புதிய சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் சிக்னல் முறை வெற்றி அடையாததால் தற்காலிகமாக கைவிடப்பட்டு, மீண்டும் பழைய யூ-டர்ன் முறையே அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலை குறைக்க நவஇந்தியா பகுதியில் 4 திசைகளிலும் புதிய சிக்னல் அமைக்கப்பட்டது. அதில் ஒரு திசையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் போது, மற்ற 3 திசைகளிலும் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் அந்த திசைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக, ஜி.டி மேம்பாலத்தின் இறங்குதளப் பகுதியில் வாகனப் போக்குவரத்து மிக அதிகமாக உள்ளது.

நகருக்குள் நுழையும் வாகனங்கள் அந்தப் பகுதியில் ஒன்று கூடுவதால், அங்கு நெரிசல் ஏற்படுகிறது. மேம்பாலப் பகுதியில் வாகன நெரிசலைக் குறைக்க கூடுதல் நேரம் ‘பச்சை விளக்கு’ அளிக்கப்பட்டால், நகரை விட்டு வெளியேறும் திசையில் மற்ற வாகனங்கள் அதிக அளவில் தேங்குகின்றன. போக்குவரத்து ஓட்டத்தைச் சமன் செய்ய பல்வேறு சுழற்சி முறைகள் முயற்சித்துப் பார்க்கப்பட்டது. இருப்பினும், அனைத்து முயற்சிகளிலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இதன் காரணமாக, பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், புதிய சிக்னல் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பழைய நடைமுறையான யூ-டர்ன் முறையே கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: