நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கல்பண்டகசாலை தெருவை சேர்ந்தவர் அஸ்ரப்அலி. இவரது மனைவி பல்கிஷ். இவர்களுக்கு இக்ராமுல்லா, இஹ்ஸானுல்லா என்ற 2 மகன்கள் உள்ளனர். இரட்டையர்களான இவர்கள் இருவருக்கும் தற்போது 42 வயதாகிறது. 2 பேரும் வெளியூரில் இருந்தாலும் நாகூரில் இருவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளது. இந்நிலையில் தற்போது நடந்த சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் 2 பேருக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. அவற்றை நிரப்பி அலுவலர்களிடம் வழங்கிய போது, இக்ராமுல்லாவுக்கு மட்டும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த அலுவலர்கள், இஹ்ஸானுல்லாவுக்கு பதிவேற்றாமல் விட்டுவிட்டனர்.
இதுதொடர்பாக அவரது பெற்றோர் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டபோது, 2 பேரும் ஒரே நபர்போல் உள்ளனர். எனவே இஹ்ஸானுல்லாவுக்கு பதிவேற்றம் செய்ய முடியாது எனக்கூறியதாக தெரிகிறது. இதில் ஏற்கனவே 2 பேருக்கும் தனித்தனியாக வாக்காளர் அட்டையாள அட்டை உள்ளது. 2002 வாக்காளர் பட்டியலில் இருப்பதால் இருவரும் வாக்களித்துள்ளனர் என பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், அலுவலர்கள் இஹ்ஸானுல்லா பெயரை பதிவேற்றம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இரட்டையர்களாக பிறந்து ஒரே முகச்சாயலில் இருக்கும் ஒரே காரணத்தால் ஒருவரின் வாக்குரிமையை பறிப்பது எந்த வகையில் நியாயம், ஒரு மகனின் எஸ்ஐஆர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.
* 93 பேர் வசிக்கும் மாஞ்சோலையில் 1100 வாக்காளர் பதிவேற்றம்: 5 பிஎல்ஓக்களுக்கு நோட்டீஸ்
நெல்லை: நெல்லை மாவட்டம், மாஞ்சோலையில் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனியில் பணியாற்றிய தேயிலை தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு அப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது. தொழிலாளர்கள் பலர் இடம் பெயர்ந்து விட்ட நிலையில் தற்போது அங்கு 93 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு 1100க்கும் மேற்பட்டோர் உள்ளதாக வாக்காளர் படிவங்கள் சிறப்பு தீவிர திருத்த பணியில் (எஸ்ஐஆர்) ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் கவனத்திற்கு தெரியவந்தது.
இதையடுத்து மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட்களில் தேர்தல் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு 93 பேர் மட்டுமே வசிப்பது தெரியவந்தது. ஆனால் 1,100 பேர் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது எப்படி என சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ஆயுஷ்குப்தா, 5 பிஎல்ஓக்களுக்கு விளக்கம் கேட்டு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எஸ்ஐஆர் பணியில் எழுந்துள்ள இந்த குளறுபடி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
