சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் மீது ராம்சார் அந்தஸ்து என்ற பெயரில் அதிகாரங்களை திணிப்பதா என்று ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: சென்னை நகரின் உயிர் மூச்சாக விளங்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் தொடர்பாக, “ராம்சார் சதுப்பு நிலம்” என்ற அந்தஸ்தின் பெயரில், அதன் செல்வாக்கு மண்டலம் மற்றும் நிர்வாகத் தீர்மானங்களை ஒன்றிய அரசு அமைப்புகள் நிர்ணயிப்பதாக தமிழ்நாடு அரசே நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நிர்வாகம் முழுமையாக தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும். செல்வாக்கு மண்டலம் குறித்து எந்த முடிவும் எடுப்பதற்கு முன் தமிழ்நாடு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் கருத்துகள் கட்டாயமாகப் பெறப்பட வேண்டும். ராம்சார் அந்தஸ்து, மாநில உரிமைகளை குறைக்கும் கருவியாக அல்ல; பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒத்துழைப்பு தளமாக மட்டுமே செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
