பெங்களூரு காதல் ஜோடி வேளாங்கண்ணி ஆலயத்தில் கலப்பு திருமணம்; 4 பேரை வெட்டிவிட்டு காரில் கடத்திய புதுப்பெண்ணை கடலூரில் போலீஸ் மீட்பு: கணவருடன் அனுப்ப நீதிபதி உத்தரவு; உறவினர்கள் 9 பேர் கைது

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி விடுதியில் தங்கியிருந்த புது மாப்பிள்ளையையும், அவரது குடும்பத்தினரையும் அரிவாளால் வெட்டிவிட்டு இளம்பெண்ணை காரில் கடத்தி சென்ற உறவினர்கள் 9 பேர் கடலூரில் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகவாரா பகுதியை சேர்ந்தவர் டேனியல் (50). இவரது மனைவி கலையரசி (38). இவர்களது மகன் ராகுல் (22). வெல்டிங் பட்டறை வைத்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜாராவ். இவரது மகள் கீர்த்தனா (21). தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ராகுலும், கீர்த்தனாவும் கடந்த 6ம்தேதி வீட்டை விட்டு வெளியேறி கோவா சென்றனர்.

இதுதொடர்பாக இரு வீட்டாரும் தனித்தனியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் ராகுல், கீர்த்தனாவுடன் கோவாவில் இருப்பதை அறிந்த ராகுலின் பெற்றோர், உறவினர் பிரகாஷ் (38) ஆகியோர் கோவா சென்று இருவரையும் மீட்டனர். பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் கடந்த 10ம்தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்தனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் வைத்து மகனுக்கும், அவர் காதலித்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தனர். இதனை தொடர்ந்து கீர்த்தனா, பெற்றோரை தொடர்பு கொண்டு ராகுலுக்கும், தனக்கும் திருமணம் முடிந்து விட்டது என கூறியுள்ளார். உடனே கீர்த்தனாவின் பெற்றோர், இனி உங்களை பிரிக்க மாட்டோம். நீங்கள் வேளாங்கண்ணியிலேயே இருங்கள். நாங்கள் வந்து பெங்களூருக்கு உங்களை அழைத்து செல்கிறோம் என கூறியுள்ளனர்.

இதை நம்பிய கீர்த்தனா, காதல் கணவர் ராகுல் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் 6 பேர் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். இதையடுத்து கீர்த்தனாவின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் வேளாங்கண்ணி விடுதிக்கு வந்தனர். கீர்த்தனா மற்றும் ராகுல் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து கீர்த்தனாவை வலுக்கட்டாயமாக தூக்கி செல்ல முயன்றனர். தகவலறிந்து வந்த வேளாங்கண்ணி போலீசார், இரண்டு பேரும் மேஜர் என்பதால் யாரும் தடை செய்யமுடியாது என்று கீர்த்தனாவின் குடும்பத்தினரிடம் கூறி வெளியேற்றினர். ஆனால் போலீசார் சென்றதும், மீண்டும் ராகுல், கீர்த்தனா தங்கியிருந்த விடுதிக்கு வந்து, கீர்த்தனாவை வெளியே இழுத்தனர். தடுத்த ராகுல், தந்தை டேனியல், தாய் கலையரசி, உறவினர் பிரகாஷ் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

கீர்த்தனாவை அடித்து உதைத்து காரில் கடத்தி சென்றனர். இதையடுத்து பலத்த காயத்துடன் இருந்த புதுமாப்பிள்ளை உள்பட 4 பேரையும் விடுதியில் இருந்தவர்கள் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான கார் எண்ணை வைத்து டிரைவரின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து டிராக் செய்தனர். அப்போது அந்த கார் கடலூர் சேத்தியாதோப்பு பகுதியில் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து கடலூர் போலீசாரை, நாகப்பட்டினம் தனிப்படை போலீசார் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். கடலூர் போலீசார், அந்த காரையும் மற்றும் அதில் வந்தவர்களையும் நேற்றுமுன்தினம் இரவு மடக்கி பிடித்து நாகப்பட்டினம் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கீர்த்தனாவின் உறவினர்கள் வென்கோப்ராவ்(33), புனித்குமார்(37), ராமநாத்ராவ்(40), விஜய்(35), ராஜாராவ்(43), கார்த்திக்(35), மஞ்சேஸ்வரி(36), சவிதா(39), கோனனஹல்லி(30) ஆகிய 9 பேரை கைது செய்து, நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் ராகுலுடன் செல்வதாக கீர்த்தனா தெரிவித்ததால் போலீஸ் பாதுகாப்புடன் கணவருடன் கீர்த்தனாவை அனுப்பி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: